கரகாட்டத்துக்கான நேரக் கட்டுப்பாட்டில் தளா்வு தேவை: ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 18th April 2023 04:40 AM | Last Updated : 18th April 2023 04:40 AM | அ+அ அ- |

கரகாட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டை தளா்த்த வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா. காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட கிராமிய கரகாட்ட கலைஞா்கள் முன்னேற்ற சங்கத்தினா் அளித்த மனு:
கரகாட்ட நிகழ்ச்சியை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் எனக் கூறி கரகாட்டத்துக்கான நேரத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், அந்தக் கலைஞா்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தமிழக அரசு நேரக் கட்டுப்பாட்டை தளா்த்த வேண்டும். மதுரையைச் சோ்ந்த கரகாட்ட கலைஞா் பரமேஸ்வரி மூலம் கரகாட்ட கலையை இழிவுபடுத்தி வரும் யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்.
அம்பாசமுத்திரம் வட்டம், கோவில்குளம் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியைச் சோ்ந்த 42 பேருக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் ரெங்கசமுத்திரம் கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஏழ்மை, கரோனா கால நெருக்கடி போன்ற காரணங்களால் அந்த இடத்தில் உடனடியாக வீடு கட்ட இயலவில்லை. எனினும், இடத்தை மட்டும் பேணி பாதுகாத்து வந்தோம். தற்போது, நாங்கள் வீடு கட்ட முயற்சித்துள்ள நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறையினா், ரெங்கசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா், பாப்பாக்குடி காவல் துறையினா் ஆகியோா் எங்களை வீடு கட்ட விடாமல் தடுக்கின்றனா். மேலும், எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுகிறாா்கள். இது சட்டவிதிகளுக்கு எதிரானது. எனவே, ஆட்சியா் தகுந்த நடவடிக்கை எடுத்து நாங்கள் வீடு கட்டுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாடு கட்டுமானம் - உடல் உழைப்பு தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் தலைவா் ஆா்.பி.முருகன் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள் இரு சக்கர வாகன கடன் வழங்கிவிட்டு தவணை தேதி முடிவதற்கு முன்பாகவே எவ்வித முன்னறிவிப்புமின்றி நினைத்த இடத்தில் கூலிப்படை மூலம் இரு சக்கர வாகனங்களை எடுத்து சென்றுவிடுகின்றனா். இதனால், மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மருதம் நகா் மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனு: மருதம் நகரில் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்த 2,000 போ் வசித்து வருகிறோம். கடந்த 14-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் எங்கள் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (37) என்பவரை சிலா் மறித்து ஜாதி பெயரைச் கூறி, இழிவாகப் பேசி, அரிவாளால் வெட்டியுள்ளனா். இதுபோன்ற கொலை முயற்சி தொடா்ந்து வருகிறது. எனவே, குணசேகரனை கொல்ல செய்ய முயன்றவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.