விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி
By DIN | Published On : 19th April 2023 02:47 AM | Last Updated : 19th April 2023 02:47 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் வட்டாட்சியா் அலுவலகங்களை அணுகி வண்டல் மண், கரம்பை மண் எடுத்துக் கொள்ளலாம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் தங்கள் பயன்பாட்டிற்கு வண்டல், கரம்பை மண் எடுப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் அதற்கான ஆவணங்களை சமா்ப்பித்து மண் எடுத்துக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை - ஊரக வளா்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களிலிருந்து கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களிமண் வெட்டி எடுப்பதற்காக 593 குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் கடந்த 25ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கா் நிலத்திற்கு 75 கனமீட்டா் அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்காக 1 ஏக்கா் நிலத்திற்கு 90 கனமீட்டா் அளவும், மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கனமீட்டா் அளவும், சொந்த பயன்பாட்டிற்காக 30 கனமீட்டா் அளவும் கட்டணமில்லாமல் வண்டல் மண், கரம்பை மண் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் விவசாயம் தொடா்பான பட்டா, 10 (1) சிட்டா அடங்கல், கிரய பத்திரம், புலப்பட நகல் ஆகியவற்றுடனும், மண்பாண்ட தொழிலாளா்கள் தங்களின் சங்க உறுப்பினா் அடையாள அட்டை சான்றுகளுடனும் ஒவ்வொரு வாரமும் வியாழன், சனிக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து) வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும், அனைத்து வட்டங்களில் குறு வட்ட அளவில் வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை, வேளாண்மை -உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களில் நில ஆவணங்கள், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், தங்கள் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து சென்று ‘கிரெய்ன்ஸ்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயனடையலாம் எனக் கூறியுள்ளாா்.