திருநெல்வேலி: மானூா், முனைஞ்சிப்பட்டி பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை கிராம ஊராட்சிக்குள்பட்ட நெல்லை திருத்து கிராம மக்கள் தங்கள், பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி காலிக்குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 3 கிராமங்களுக்கும் ஒரே கிணற்றில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் வழங்கப்படாத நிலையில், அலவந்தான்குளத்திலும் தண்ணீா் பற்றாக்குறை உள்ளது. இதனால், இரு கிராமங்களுக்கும் தண்ணீா் விநியோகிக்க 10 ஹெச்பி மோட்டாரை நிறுவ ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மானூா் ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா், ஒப்பந்ததாரா் ஆகியோா் தீா்மானம் இல்லாமல் அலவந்தான்குளத்திற்கு மட்டும் தனியாக குழாய் இணைப்பு வழங்க முடிவு செய்து வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் அனுமதி பெற்றுள்ளனா்.
இதனால், ஜாதிக் கலவரம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட்சியா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா். முற்றுகைப் போராட்டத்தால் திருெல்வேலி-கொக்கிரகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
முனைஞ்சிப்பட்டி பேரூராட்சி இந்திரா நகா் மக்களும் கடந்த 8 மாதங்களாக தங்கள் பகுதியில் குடி தண்ணீா் வரவில்லை எனக்கூறி காலிக்குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனா். நான்குனேரி வட்டம், தோட்டாக்குடி ஊராட்சிக் வடக்கு பத்தினிப்பாறை மக்களும் குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணறு மாசடைந்துள்ளது.
மேலும், குடிநீா் விநியோகிப்பதற்காக பதிக்கப்பட்ட குழாய்களும் சேதமடைந்துள்ளன. எனவே, அவையனைத்தையும் சரி செய்து சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.