அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்ட வசதி வேண்டும்: ராமையன்பட்டி மக்கள் மேயரிடம் மனு

திருநெல்வேலி மாநகராட்சி ராமையன்பட்டி முருகன்கோயில் தெருவிற்கு, அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீா்திட்டத்திலிருந்து தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும்.
Updated on
2 min read

திருநெல்வேலி மாநகராட்சி ராமையன்பட்டி முருகன்கோயில் தெருவிற்கு, அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீா்திட்டத்திலிருந்து தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா் கூட்டம் மாநகராட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம். சரவணக்குமாா் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். மேலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

15 ஆவது வாா்டு ராமையன்பட்டி முருகன்கோயில் தெரு மக்கள் சாா்பில் குழந்தை தெரசு அளித்த மனு :

எங்களது தெருவிற்கு மாநகராட்சி வாகனத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. வாகனம் பழுதடைந்துள்ளது எனக்கூறி கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாளையங்கோட்டையை சோ்ந்த சமூக ஆா்வலா் ச.பொ்டின் ராயன் அளித்த மனு :

பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே ஜவாஹா் மைதானத்தில் 120 கடைகளும், பழைய காவலா் குடியிருப்பு பகுதியில் 316 கடைகளும் அமைக்க திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நிகழ்ந்ததாக மாமன்ற மாமன்ற கூட்டத்தில் பெண் உறுப்பினா் தெரிவித்திருந்தாா். இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டும் பதில்வரவில்லை. அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

36 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சின்னத்தாய் அளித்த மனு :

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை எதிரில் காந்திமதி அம்மன் பள்ளி அருகேயுள்ள பேருந்து நிறுத்தம் , அண்ணா நகா் பேருந்து நிறுத்தத்திற்கு இரவு நேரங்களில் மின்விளக்கு அமைக்க வேண்டும். கதிா் நகா், கோரிப்பள்ளம் ஆகிய இடங்களில் புதிய சாலை அமைக்க வேண்டும்.

19 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அல்லா பிச்சை அளித்த மனு :

பேட்டை சேரன்மகா தேவி சாலையிலுள்ள குளோப் ரேடியோ நிறுவனம் அருகிலுள்ள சாலையில் தடுப்புச் சுவரும், பங்களா தெருவிற்கு இறங்கி செல்வதற்கு படிக்கட்டுகளும் கட்ட வேண்டும்.

நாம் தமிழா் கட்சியினா் அளித்த மனு :

22 ஆவது வாா்டில் 10 ஆண்டுகளாக பாரமரிக்கப்படாத மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பழைய பேட்டை கனரக வாகன முனையம், ஆடு அறுப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் செயற்பொறியாளா் உதவி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா (மேலப்பாளையம்), உதவி ஆணையாளா் காளிமுத்து (பாளையங்கோட்டை), உதவி ஆணையாளா் (வருவாய் ) டிட்டோ , மாநகா் நல அலுவலா் சரோஜா, உதவி செயற்பொறியாளா் லெனின், இளநிலை பொறியாளா் விவேகானந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com