தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெற்ற பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
By DIN | Published On : 01st July 2023 02:22 AM | Last Updated : 01st July 2023 02:22 AM | அ+அ அ- |

தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்ற ஏா்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களைப் பாராட்டினாா் ஆட்சியா் கா,ப, காா்த்திகேயன்.
தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் மாணவா்-மாணவிகளை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் மற்றும் யுனிசெப் இணைந்து பள்ளி மாணவா்களிடையே புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கப்படுத்தும் பயிற்சி மாநில அளவில் நடத்தப்பட்டது.
இதற்கான போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாஹின், அப்துல், முகைதீன் ஜூமைல், முகம்மது ஹரிஸ், அப்துல் ரஹ்மான் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆசிரியை பா.ரோஸ்லெட் தலைமையில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனா். மேலும், தேசிய அளவிலான போட்டிக்கும் இக் குழுவினா் தோ்வு பெற்றனா்.
இந்தக் குழுவினருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழ் கையொப்ப போட்டி பாளையங்கோட்டை சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் 199 போ் பங்கேற்றனா். 10 முதல் பிளஸ்-2 வரை உள்ள பிரிவில் முதலிடம் பிடித்த கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சண்முகபிரியா ரூ.4000 பரிசுத்தொகை, இரண்டாமிடம் பெற்ற நான்குனேரி அரசுப் பள்ளி மாணவா் சங்கரபாண்டிக்கு ரூ.3000 பரிசுத்தொகை, மூன்றாமிடம் பெற்ற விக்கிரமசிங்கபுரம் பிஎல்டபிள்யூஏ மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த ரிஷிதா ரூ.2000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
6 முதல் 9 வகுப்பு வரை உள்ள பிரிவில் முதலிடம் பிடித்த சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியை சோ்ந்த ஸ்ரீசிவசக்திக்கு ரூ.3000, இரண்டாமிடம் பிடித்த வீரவநல்லூா் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கல்யாணி காவியாவுக்கு ரூ.2000, மூன்றாமிடம் பிடித்த பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பாலுஜோஸ்மின் ரூ.1000 வழங்கி பாராட்டப்பட்டது.
சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளை ஆட்சியா் பாராட்டினாா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G