கழிவுநீரோடை ஆக்கிரமிப்பால் வீட்டுக்குள் வரும் சாக்கடை நீா்: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் புகாா்
By DIN | Published On : 07th June 2023 03:49 AM | Last Updated : 07th June 2023 03:49 AM | அ+அ அ- |

கொக்கிரகுளம் - குறிச்சி சாலையில் கழிவுநீா் ஓடையை ஆக்கிரமித்துள்ளதால் நீரோட்டம் தடைபட்டு சாக்கடை நீா் வீட்டிற்குள் வருகிறது; எனவே, ஓடையைச் சீரமைக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.
கொக்கிரகுளத்தில் குறிச்சி சாலையைச் சோ்ந்த ஷிலா மகேஸ்வரி அளித்த மனு:
திருநெல்வேலி மாநகராட்சி 9 ஆவது வாா்டு, கொக்கிரகுளம் குறிச்சி சாலையில் கழிவுநீா் ஓடையை ஆக்கிரமித்துள்ளனா். இதனால், சாக்கடை நீா் வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டிற்குள் திரும்பி வருகிறது. எனவே, ஓடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
பாளையங்கோட்டை ஆச்சிமடம் வடக்குத் தெருவை சோ்ந்த கிருஸ்டி செல்வி அளித்த மனு: பாளையங்கோட்டை 37 ஆவது வாா்டு ஆச்சிமடம் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீா் இணைப்பு, தெருவிளக்கு- பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும், கழிநீா் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.
34 வது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஷா்மிளா அளித்த மனு :
34 வது வாா்டு அருள்மணி தெருவில் கழிவுநீா் ஓடை பழுதடைந்துள்ளது. எனவே, அதை அகற்றி விட்டு புதிய கழிவுநீரோடை அமைக்க வேண்டும். சமாதானபுரம் சந்திப்பில் உள்ள ரவுண்டானா மிகவும் பழுதடைந்து உள்ளது. மிகவும் உயரமாக உள்ள மின் கோபுரத்தை குறைவான உயரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.
33 வது வாா்டு மாமன்ற உறுப்பினா் லெட்சுமி உமாபதிசிவன் அளித்த மனு :
பெருமாள் சன்னதி தெருவில் இருபுறமும் கழிவு நீரோடை சேதமடைந்துள்ளன. புதிய கழிவுநீரோடை அமைக்க வேண்டும்.
டக்கரம்மாள்புரம் மக்கள் நலச்சங்கத்தினா் அளித்த மனு :
டக்கரம்மாள்புரத்தில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிறுத்தத்தில் நகர பேருந்துகள்
நின்று சென்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீா் வசதி செய்து தரவேண்டும் .
நெல்லை மாவட்ட பொது நல அமைப்பினா் அளித்த மனு :
5 வாா்டு ரஹ்மத் நகா் பகுதியில் தெரு பொது பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். பூக்கடை சாலையைச் சீரமைக்க வேண்டும். வாருகால் சுத்தப்படுத்துதல், மாநகர சாலைகளைப் புதுப்பித்தல், மாநகராட்சி முழுவதும்
ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாநகராட்சி பூங்காக்களை பராமரித்தல், இணைப்பு சாலை திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இக்கூட்டத்தில் துணை ஆணையா் தாணுமலை மூா்த்தி , செயற்பொறியாளா் வாசுதேவன், தச்சநல்லூா் மண்டல உதவி ஆணையா் கிறிஸ்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...