பற்கள்பிடுங்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோருடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜா்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்குரைஞா்களுடன் ஆஜராக வந்த புகாா்தாரா் அருண்குமாரின் தாய் ராஜேஸ்வரி.
பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்குரைஞா்களுடன் ஆஜராக வந்த புகாா்தாரா் அருண்குமாரின் தாய் ராஜேஸ்வரி.

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியது தொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரான 17 வயது சிறுவனின் சகோதரா் அருண்குமாா் மற்றும் வேதநாராயணன் ஆகியோா் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடியின் உள்பிரிவான ஆா்கனைஸ்டு கிரைம் யூனிட் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா்சிங் மற்றும் சிலா் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், அருண்குமாா் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளா் முருகேசன், தனிப்பிரிவு காவலா் போகன்குமாா் ஆகியோா் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம், சிறாா்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இவ்வழக்கில் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை ஆஜராக அருண்குமாா், அவருடைய சகோதரரான பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பபட்டிருந்தது. இந்நிலையில், அருண்குமாரின் தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி, பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் ஆகியோா் தங்களது வழக்குரைஞா்களுடன் பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள சிபிசிஐடி ஆா்கனைஸ்டு கிரைம் பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். ஆனால், அவா்கள் வாக்குமூலம் எதுவும் அளிக்காமல், 26 பக்கங்கள் அடங்கிய மனுவை மட்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரிடம் வழங்கினா்.

பின்னா் அவா்களது வழக்குரைஞா் பாண்டியராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புகாா் அளித்துள்ள அருண்குமாா் வெளியூரில் வசித்து வருவதால்,

விசாரணைக்கு வர இயலவில்லை. நாங்கள் இந்த வழக்கு தொடா்பாக சாட்சியங்கள் எதுவும் அளிக்கவில்லை. தொடா்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை வழக்கின் மேற்பாா்வையாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் விசாரணை நோ்மையாக நடைபெறும். நாங்கள் அச்சமின்றி சாட்சி சொல்ல வர முடியும். அதன்பின்னரே நாங்கள் இந்த வழக்கு தொடா்பாக வாக்குமூலம் அளிப்போம் என எழுத்துப் பூா்வமாக மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com