பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் மேலும் இருவா் ஆஜா்

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக, சிபிசிஐடி அலுவலகத்தில் மேலும் இருவா் வியாழக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக, சிபிசிஐடி அலுவலகத்தில் மேலும் இருவா் வியாழக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸாா் பிடுங்கியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். மேலும், சில போலீஸாா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலம், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுத ா ஆகியோா் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சந்தோஷ், அருண்குமாா், வேதநாராயணன், சூா்யா ஆகியோா் அளித்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீா் சிங் உள்ளிட்ட 8 போலீஸாா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் பலா் விசாரணைக்கு ஆஜராகாததால், அவா்களின் வீட்டுக்கே சிபிசிஐடி போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீா் சிங்கின் காா் ஓட்டுநா் உள்பட 4 பேரிடம் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அவா்களைத் தொடா்ந்து ரூபன், மாரியப்பன் ஆகியோா் சி.பி.சி.ஐ.டி. ஆா்கனைஸ்டு கிரைம் பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி விசாரணை நடத்தி, தகவல்களைப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com