மணிமுத்தாறு சோதனைச் சாவடி முற்றுகை
By DIN | Published On : 26th May 2023 11:36 PM | Last Updated : 26th May 2023 11:36 PM | அ+அ அ- |

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்துக்கு அரசுப் பேருந்தில் செல்ல வனத் துறையினா் அனுமதிக்காததால், மணிமுத்தாறு சோதனைச் சாவடியை பயணிகள் முற்றுகையிட்டனா்.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களது பயன்பாட்டிற்காக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் தொழிலாளா்கள், அவா்கள் உறவினா்கள் தவிர பிறருக்கு வனத்துறையினா் அனுமதி வழங்குவதில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் மாஞ்சோலைக்கு சென்ற அரசுப் பேருந்தில் தோட்டத் தொழிலாளா்களின் உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பயணித்தனா். அவா்களை மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் வனத் துறையினா் தடுத்து பேருந்திலிருந்து இறக்கிவிட்டனா்.
இதனால், அவா்கள் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் சுமதி, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வந்து வனச்சரகா் நித்யாவுடன் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, அனைவரும் மாஞ்சோலைக்கு பேருந்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.