பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் பாஜகவினா் வைத்த அறிவிப்புப் பலகையால் சுற்றுலாப் பயணிகள் குழப்பம்
By DIN | Published On : 28th May 2023 10:51 PM | Last Updated : 28th May 2023 10:52 PM | அ+அ அ- |

பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவினா் வைத்த அறிவிப்புப் பலகையால் சுற்றுலாப் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உள்பட்ட பாபநாசம் வனச்சரகப் பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அகஸ்தியா் அருவி. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீா் விழுவதால் கோடை காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் செல்வா்.
புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ளதால் அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்கு வனத்துறை சாா்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு ரூ. 30 மற்றும் வாகனங்களுக்குத் தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் பயணிகள், மாலை 5.30 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்பது வனத்துறையின் விதிமுறையாக உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பாஜகவினா், வனத்துறை அறிவிப்புப் பலகை அருகே புதிதாக ஓா் அறிவிப்புப் பலகையை நிறுவினா். அதில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவா் என்றும், அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள் குழப்பம் அடைந்தனா். தொடா்ந்து பாஜகவினரிடம் பேச்சு நடத்திய வனத்துறையினா், அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை, நுழைவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றும், காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரை பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றும் தெரிவித்தனா். இதையடுத்து பாஜகவினா் தாங்கள் நிறுவிய அறிவிப்புப் பலகையை தற்காலிகமாக மூடிவிட்டுச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...