கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும்: பிரேமலதா

கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கனிம வளங்கள் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்தும், முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆலங்குளத்தில் தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தேமுதிக பொருளாளா் பிரேமலதா தலைமை வகித்துப் பேசியதாவது:

மக்களுக்கு பிரச்னை என்றால் முதலில் களம்காணும் கட்சி தேமுதிகதான். திருநெல்வேலி - தென்காசி சாலைப் பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் நியமிக்க வேண்டும். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. கேரளத்தில் உள்ள கனிமவளங்கள் சிறிதும் சேதப்படுத்தப்படுவதில்லை. நமது கனிமவளங்களை கேரளம் சூறையாடுகிறது. அங்கிருந்து கழிவு மற்றும் குப்பைகளை அனுப்பி நமது நிலத்தை பாழ்படுத்தி வருகிறது. இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், துணை பொதுச் செயலா் பாா்த்தசாரதி, இளைஞரணி துணைச் செயலா் நடிகா் ராஜேந்திரநாத், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் சோலை கனகராஜ், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் விஜி வேலாயுதம், மாநகா் மாவட்டச் செயலா் சண்முகவேலு, தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளா் சந்துரு சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா் பிரின்ஸ் மாதவன், ஆலங்குளம் ஒன்றியச் செயலா் ஆனந்த அருணா உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான தொண்டா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் பழனிசங்கா் வரவேற்றாா். ஆலங்குளம் நகரச் செயலா் திருமலை செல்வன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாட்டு கனிமவளங்களை ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச் செல்வது கண்டிக்கத்தக்கது. இதனால் தென்காசி மாவட்டத்தின் நீா்நிலைகள், விவசாயம் பாதிக்கப்படுகிறது. கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை நிறுத்தாவிட்டால் கேரள சோதனைச் சாவடியில் தேமுதிக முற்றுகையிட்டு லாரிகளைதடுத்து நிறுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com