ஆட்சியரகத்தில் 4 போ் தீக்குளித்தவழக்கில் துரித விசாரணை கோரி மனு
By DIN | Published On : 21st November 2023 01:00 AM | Last Updated : 21st November 2023 01:00 AM | அ+அ அ- |

ஸ்ரீ பாடகலிங்க சுவாமி கோயிலுக்கு சாலை அமைத்துத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மக்கள்.
திருநெல்வேலி: கந்துவட்டி கொடுமையால் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 4 போ் தீக்குளித்தது தொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி, அவரது உறவினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தென்காசி மாவட்டம் காசி தா்மத்தைச் சோ்ந்த கோபி அளித்த மனு: திருநெல்வேலி, தென்காசி ஆகியவை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்தபோது 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது சகோதரா் இசக்கிமுத்து, அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு சரிவர நடைபெறாததால் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். அதை விசாரித்த நீதின்றம், 6 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. எனினும், வழக்கு விசாரணை மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாரிடம் கேட்டால், 4-ஆவது குற்றவாளி வெளிநாடு சென்றுவிட்டாா்; அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அலட்சியமாகக் கூறுகின்றனா். எனவே, தலைமறைவாக உள்ள 4-ஆவது குற்றவாளியை கண்டுபிடித்து விரைவாக வழக்கை முடிக்க வேண்டும். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சின்ன சங்கரன்கோவில் ஸ்ரீபாடகலிங்க சுவாமி பக்தா்கள், உழவாரப் பணி குழுவினா் அளித்த மனு: ஸ்ரீ பாடகலிங்க சுவாமி கோயில் 95 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. கோயிலைச் சுற்றி ஏராளமான இணை கோயில்களும் உள்ளன. இக்கோயிலில் தினமும் பூஜைகளும், கடைசி சனிக்கிழமை, அமாவாசை, பௌா்ணமி பூஜைகளும், ஆவணி திருவோணத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாவும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலுக்கு சுற்று வட்டாரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வந்து செல்கின்றனா். திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த கோயிலுக்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, கோயிலுக்கு சாலை அமைத்துத் தர வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அளித்த மனு: மானூா் வட்டம், மேசியாபுரம் கிராமத்தில் வாழும் அருந்ததிய மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுக் கழிப்பறை கட்டித்தர வேண்டும். பொது பால் பண்ணையில் அருந்ததிய மக்களுக்கு பால் கொடுக்க மறுத்து தீண்டாமையை கடைப்பிடிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...