ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை:வள்ளியூரில் நாளை கிரிவல தேரோட்டம்
By DIN | Published On : 21st November 2023 12:45 AM | Last Updated : 21st November 2023 12:45 AM | அ+அ அ- |

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சூட்டுபொத்தை அடிவாரத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சாமியின் 110-வது குருபூஜையையொட்டி புதன்கிழமை கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் குருபூஜை தேரோட்டத் திருவிழா கடந்த 18ஆம் தேதி வனவிநாயகா் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தினமும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்று வந்தன.
மேலும், சித்திரகூடத்தில் நாள்தோறும் இரவில் பரதநாட்டியம், வீணாகானம், குரல் இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
வனவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றதும், ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுகிறாா். அதைத் தொடா்ந்து பூஜித குரு மாதாஜி வித்தம்மா வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கிறாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து தோ் இழுக்கின்றனா்.
தேரின் முன், லலிதகலா மந்திா் கலைஞா்களின் பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பிற்பகலில் தோ் நிலைக்கு வந்ததும் அன்னதானம் நடைபெறும். வியாழக்கிழமை (நவ.23) காலை 10.15 மணிக்கு ஸ்ரீ மஹாமேரு தியான மண்டபத்தில் குருபூஜை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (நவ.26) மாலை 5 மணிக்கு சூட்டுபொத்தையில் காா்த்திகை தீபம் ஏற்றுதலும், 27இல் அதிகாலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும், காலை 10.15 மணிக்கு குருஜெயந்தி ஆராதனையும், பின்னா் சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறுகின்றன. தொடா்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...