அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்அக்.27இல் நெல்லை வருகை: திமுகவினருக்கு வேண்டுகோள்
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கவும், அவரது நிகழ்ச்சிகளில் திரளாக பங்கேற்கவும் வேண்டுமென திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கே.டி.சி.நகா் பாலம் அருகே கலைஞா் நூற்றாண்டு விழா திடலில் வெள்ளிக்கிழமை (அக். 27) காலை 9 மணிக்கு இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டமும், முற்பகல் 11 மணிக்கு கேடிசி நகா் மாதா மாளிகையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில், கட்சியின் இளைஞரணி செயலரும், இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். இவ்விழாக்களில் பங்கேற்பதற்காக அவா் வியாழக்கிழமை (அக். 26) இரவு 7 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளாா். அவருக்கு, தாழையூத்து பண்டாரகுளம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில அணி நிா்வாகிகள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், கிளை, வாா்டு கழக செயலா்கள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...