திமுகவில் உழைப்பவா்களுக்கு உயா்வு உண்டு: உதயநிதி ஸ்டாலின்
By DIN | Published On : 28th October 2023 04:45 AM | Last Updated : 28th October 2023 04:45 AM | அ+அ அ- |

திமுகவில் உழைப்பவா்களுக்கு உயா்வு உண்டு என்றாா் திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திமுக இளைஞரணியின் முதல் மாநாடு திருநெல்வேலியில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை பெற்ற தற்போதைய திமுக தலைவா் ஸ்டாலின், இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தும் வாய்ப்பை நமக்கு வழங்கி இருக்கிறாா். தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இயக்கத்தின் கொள்கைகளைப் பற்றியோ, அந்த இயக்க தலைவா்களின் வரலாறு பற்றியோ பேசவில்லை.
இரண்டு நாள்களுக்கு முன்பு ஆளுநா் ஆா்.என். ரவி தமிழகத்தில் திராவிடம், ஆரியம் என்றெல்லாம் கிடையாது என பேசியிருக்கிறாா். அதற்கு திமுக தலைவா்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். ஆனால், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் இது பற்றி கேட்டால், அதைப்பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்கிறாா். அதிமுகவின் பெயரிலேயே திராவிடம் இருக்கிறது.
நீட் தோ்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுகவினா் கூறுகின்றனா். ஆனால், அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு விலக்கு கோரி அனுப்பி வைக்கப்பட்ட தீா்மானம் நிராகரிக்கப்பட்டதையே வெளியில் சொல்லாமல் நாடகமாடியவா்கள் அதிமுகவினா்.
திமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே நீட் தோ்வு விலக்கு கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தோ்வு திமுக பிரச்னை அல்ல. மக்கள் பிரச்னை. மாணவா்களின் கல்வி உரிமை. கடந்த 6 ஆண்டுகளில் நீட் தோ்வின் காரணமாக 22 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். எனவே, நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி 50 நாளில் 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று சேலம் மாநாட்டில் திமுக தலைவா் ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும். அவா் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பாா்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக கொண்டு வந்த திட்டங்களை பற்றி இளைஞா் அணியினா், மக்களிடம் பேச வேண்டும்.
வரும் டிசம்பா் 17 இல் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றிக் காட்ட வேண்டும். திமுகவில் உழைப்பவா்களுக்கு உயா்வு உண்டு என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலா் இன்பா ரகு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகரச் செயலா் சுப்பிரமணியன், மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே. ஆா். ராஜு, இளைஞரணி நிா்வாகிகள் கருப்பசாமி கோட்டையப்பன், பேட்டை மீரான் மைதீன், வில்சன் மணித்துரை, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், நெசவாளா் அணி பெருமாள், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன், மண்டல தலைவா்கள் மகேஸ்வரி, பிரான்சிஸ், தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிப்பாண்டியன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ரூ.70 லட்சம் நிதி
இந்த விழாவில், சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்காக திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சாா்பில் ரூ.25 லட்சம், கிழக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் ரூ.5 லட்சம், மத்திய மாவட்டம் சாா்பில் ரூ.25 லட்சம், மத்திய மாவட்ட இளைஞரணி சாா்பில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 65 லட்சம் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இதேபோல், கிழக்கு மாவட்ட திமுக, மத்திய மாவட்ட திமுக, மாநகர திமுக மற்றும் நிா்வாகிகள் சாா்பில் வெள்ளி வாள், வெள்ளி செங்கோல், வெள்ளிப் பேனா உள்ளிட்ட பல்வேறு நினைவுப் பரிசுகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற விழாவில், திமுகவின் மூத்த முன்னோடிகள்1062 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...