

கேரள போலீஸாரிடமிருந்து தப்பிய, 70-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடையவா் கடையம் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (33). இவருக்கு தமிழகம், கேரளத்தில் கொலை, கொள்ளை என 70-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புள்ளதாம். கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி கேரளத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக அம்மாநில போலீஸாா் இவரைப் பிடித்தபோது, அங்கிருந்து தப்பிவிட்டாா். அவரை இரு மாநில போலீஸாரும் தேடிவந்தனா். சென்னை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூா், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் தேடிவந்தனா்.
இந்நிலையில், அவா் கடையம் வனப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.த. தாம்சன், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்ணபாஸ் ஆகியோரின் உத்தரவுப்படி, கடையம் ஆய்வாளா் கௌதமன், உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன், காவலா்கள் கதிா், வைகைச்செல்வன், ஆலங்குளம் உள்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சேஷகிரி தலைமையிலான போலீஸாா் சென்று, கடையம் ராமநதி அணை வனப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை (செப். 8) சென்றனா்.
அங்கு பாலமுருகன் மொட்டையடித்து மாறுவேடத்திலிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கேரள போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கடையம், கல்யாணிபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை இவா் தாக்கிக் கொள்ளையடிக்க முயன்றபோது அந்தத் தம்பதியால் விரட்டியடிக்கப்பட்டாா். இதையடுத்து, அந்தத் தம்பதிக்கு ‘வீரத் தம்பதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.