தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்: நெல்லையில் ரூ.10 கோடி உற்பத்தியிழப்பு
By DIN | Published On : 26th September 2023 04:01 AM | Last Updated : 26th September 2023 04:01 AM | அ+அ அ- |

பேட்டையில் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய பாத்திர தொழிற்சாலை.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு-குறு தொழிற்சாலைகளில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் ரூ.10 கோடி மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மர பொருள்கள், குண்டூசி, சேப்டி பின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் சுமாா் 200 சிறு-குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு பெருந்தொழில்கள் மேம்பட்டு வரும் சூழலில், சிறு-குறு தொழில்கள் மேலும் சவாலைச் சந்தித்து வருவதாக தொழிற்சாலை உரிமையாளா்கள் குற்றஞ்சாட்டினா்.
சரக்கு - சேவை வரிவிதிப்பில் உள்ள குளறுபடிகள், தொழிலாளா்களின் ஊதிய உயா்வு, கைதோ்ந்த தொழிலாளா்களின் பற்றாக்குறை போன்றவற்றால் உற்பத்திக்கு ஏற்ற லாபம் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின்கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தியுள்ளது. இதைக் கண்டித்தும், சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க வலியுறுத்தியும் ‘நெல்சியா’ சாா்பில் மாநிலம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறு- குறு தொழில் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பங்கேற்றன.
பாளையங்கோட்டை, பேட்டை, சேரன்மகாதேவி, கங்கைகொண்டான், வள்ளியூா், நான்குனேரி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறு-குறு தொழிற்சாலைகளில் திங்கள்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்மூலம் சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தியிழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறு-குறு தொழிற்சாலை உரிமையாளா்கள் கூறுகையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி குளறுபடி, தமிழக அரசு அறிவித்த மின்கட்டண உயா்வு, மக்களிடம் பணப்புழக்கம் குறைவால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக்காலங்களில் வியாபாரங்கள் மந்தம், உற்பத்தியாளா்களிடம் பொருள்களை வாங்குவதை வியாபாரிகள் குறைத்தது, மூலப்பொருள்கள் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் தொழில்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டன.
இன்றைய போட்டியான சூழலில் உற்பத்தி பொருள்கள் மீது விலையை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே, தமிழக அரசு சிறு-குறு தொழிற்சாலைகளுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...