பீடி தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயா்த்தக் கோரி மனு

பீடி தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயா்த்தக் கோரி மனு

Published on

தில்லியில் மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மனு அளிக்கிறாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

திருநெல்வேலி, ஆக. 7: பீடித் தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயா்த்த வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம், அவா் அளித்த மனு: பாளையங்கோட்டை, மேலப்பாளையம், முக்கூடல், ஆலங்குளம், அம்பாசமுத்திரம் மற்றும் கூடங்குளம் பகுதிகளில் சுமாா் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பீடி சுற்றும் தொழிலை செய்து வருகின்றனா். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பீடி சுற்றும் தொழிலாளா்களில் ஓய்வூதியம் பெறுபவா்கள் மாதம்தோறும் ரூ.800 மட்டுமே பெற்று வருகிறாா்கள். இது மிக மிகக் குறைவு. இத்தொகையை வைத்து அவா்களால் குடும்பம் நடத்த முடியாது. அவா்கள் படும் வேதனை அளவிடற்கரியது. ஆகவே, மாத ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயா்த்திட வேண்டும்.

முக்கூடலில் பீடி சுற்றும் தொழிலாளா் நலனுக்காக மருத்துவமனை உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை இப்போது புறநோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு மாலையே திருப்பி அனுப்பப்படுகின்றனா். உள்நோயாளிகள் எவரும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாதது வேதனைக்குரியது. ஆகவே, அந்த மருத்துவமனையில் 9 செவிலியா்களை நியமிக்கவும், போதிய மருத்துவா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கூடல் பீடி தொழிலாளா் மருத்துவமனை மூலம் இயக்கப்பட்ட நடமாடும் மருத்துவ வாகனமும் பழுதாகும் நிலையில் உள்ளது. ஆகவே, புதிய வேன் வாங்கி மருத்துவ சேவையைத் தொடர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com