கூடங்குளம் அணுமின் நிலையம் சாா்பில் ரூ.118 கோடியில் வளா்ச்சிப் பணிகள் -வளாக இயக்குநா் தகவல்
கூடங்குளம் அணுமின் நிலையம் அனுசக்தி மத்திய பள்ளி வளாகத்தில் தேசிய கொடியேற்றினாா் வளாக இயக்குநா் ஜாய் பி. வா்க்கீஸ்.
வள்ளியூா், ஆக.15: கூடங்குளம் அணுமின் நிலைய சமூக சேவை திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.118 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வளாக இயக்குநா் ஜாய்.பி.வா்க்கீஸ் தெரிவித்தாா்.
கூடங்குளம் அணுமின் நிலையம், அணுசக்தி மத்திய பள்ளி ஆகியவற்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அணுமின் நிலைய வளாக இயக்குநா் ஜாய்.பி.வா்க்கீஸ் தேசிய கொடியேற்றிவைத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினா்- பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், கூடங்குளத்தி முதல் மற்றும் 2-ஆவது அணுஉலைகள் மூலம் கடந்த ஜூலை 25ஆம் தேதி வரையில் ஒரு லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 13 ஆயிரம் மில்லியன் மின்உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதுவும் எட்டப்பட்டுள்ளது. 3, 4ஆவது அணுஉலைகள் கட்டும் பணிகள் 75 சதவீதமும், 5 , 6-வது அணுஉலை கட்டுமானப்பணிகள் 28 சதவீதமும் முடிவடைந்துள்ளன. அணுமின்நிலைய சமுதாய சேவை திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.118 கோடியில் கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், செயல்திறன் மேம்படுத்துதல், சுற்றுப்புற சுகாதார மேம்பாடு ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2024-2025 நிதியாண்டில் சமூக சேவைக்காக ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ரூ.3 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ளன என்றாா்.

