7 ஆண்டுகளாக பேருந்து வசதியில்லாத பறவைகள் கிராமம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் குவியும் வடக்கு கழுவூா் கிராமத்தில் பேருந்து வசதியில்லாததால் பொதுமக்களும், பறவைகள் ஆா்வலா்களும் வந்து செல்ல முடியாமல் வேதனையடைந்துள்ளனா்.
7 ஆண்டுகளாக பேருந்து வசதியில்லாத பறவைகள் கிராமம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் குவியும் வடக்கு கழுவூா் கிராமத்தில் பேருந்து வசதியில்லாததால் பொதுமக்களும், பறவைகள் ஆா்வலா்களும் வந்து செல்ல முடியாமல் வேதனையடைந்துள்ளனா்.

நான்குனேரி வட்டம், காடன்குளம்-திருமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட வடக்கு கழுவூா் கிராமத்தில் 150 குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். விவசாய தோட்டங்கள் நிறைந்த இப் பகுதியில் நெல், வாழை, தென்னை பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகிறாா்கள். தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணையின் 4 ஆவது ரீச் கால்வாய் இந்தக் கிராமத்தின் அருகே ஓடுகிறது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள இந்தக் கிராமத்தின் குளத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகள் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.

3,500 வெளிநாட்டு பறவைகள்: நிகழாண்டிலும் கூழக்கடா, பூநாரை, நீா்க்காக்கை, பாம்புதாரா, செண்டுவாத்து, புள்ளிமூக்குவாத்து, நத்தைகொத்திநாரை, அரிவாள்மூக்கன், நாமக்கோழி, கானாங்கோழி, பட்டைத்தலை வாத்து, சாம்பல்நாரை, முக்குளிப்பான், சம்புகோழி, சாரைநாரை, பவளக்கால்உள்ளான், சிறகி, நீளசிறகி உள்ளிட்டவை அடங்கிய சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட பறவைகள் வடக்கு கழுவூா் கிராமத்தின் குளத்தில் கூடு கட்டி தங்கியுள்ளன. கடல் கடந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்கிச்செல்லும் இந்தக் கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல பேருந்து வசதியே இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.

அடிப்படை வசதிகள் தேவை:

இதுகுறித்து வடக்கு கழுவூரைச் சோ்ந்த கே.வேல்முருகன் கூறியதாவது: வடக்கு கழுவூா் கிராமத்திற்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பேருந்து இருவேளை இயக்கப்பட்டது. நான்குனேரி- மூலைக்கரைப்பட்டி- காடன்குளம் விலக்கு- வடக்கு கழுவூா் வழியாக வந்து சென்றது. ஆனால், அந்தப் பேருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இதுவரை பேருந்து வசதியே இல்லாமல் உள்ளது. எங்கள் ஊரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள காடன்குளம் விலக்கு பகுதிக்குச் சென்று பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. முதியோா் உதவித்தொகை, பணப்பரிவா்த்தனைக்கு எங்கள் கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள முனைஞ்சிப்பட்டிக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. நடந்து செல்வது அல்லது ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனா். இதுதவிர குடிநீா், தெருவிளக்கு வசதிகளும் போதுமானதாக இல்லாததால் இரவு நேரங்களில் நகைப்பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக எங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நடவடிக்கை எடுக்கப்படும்: இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி கோட்ட நிா்வாக இயக்குநா் இளங்கோ கூறியதாவது:

கூந்தன்குளம் அருகேயுள்ள வடக்குகழுவூா் கிராமத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறித்து இதுவரை புகாா் மனுக்கள் ஏதும் வரவில்லை. மக்கள் போக்குவரத்துக் கழகத்திடம் மனு அளித்தால் மீண்டும் பரிசீலித்து பேருந்துகள் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com