56 நாள்களுக்குப் பின் கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின்உற்பத்தி தொடக்கம்
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் 2ஆவது அணு உலையில் 56 நாள்களுக்குப் பின் பராமரிப்புப் பணிகள் முடிந்து மின்உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கியது.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர 3 மற்றும் 4 அணுஉலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 5 மற்றும் 6 அணுஉலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மின் உற்பத்தி நடந்து வருகின்ற முதல் மற்றும் 2ஆவதுஅணுஉலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக மின்உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இது தவிர தொழில்நுட்ப கோளாறுகளுக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில் 2ஆவதுஅணுஉலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த மே மாதம் 13ஆம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து 2ஆவது அணுஉலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தப் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து திங்கள்கிழமை மின்உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.
இதையடுத்து கூடங்குளம் அணுஉலை மூலமாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
