மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் நிவாரணத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கல்

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்கள் நிவாரணத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கியுள்ளனா்.
Published on

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு பி.பி.டி.சி. நிறுவனம் வழங்கிய 75 சதவிகிதத் தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை தொழிலாளா்நலத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனா்.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்கான உரிமம் 2028ஆம் ஆண்டு நிறைவடைவதையடுத்து, பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு விருப்பஓய்வு அறிவித்து அவா்களுக்கு 25 சதவிகித நிவாரணத் தொகையையும் வழங்கியது.

இந்நிலையில்நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என்றும் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை, இலவச வீடு வழங்க வேண்டும் என்றும் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் நடைபெற்றுவரும் நிலையில் மீதமுள்ள 75 சதவிகித நிவாரணத் தொகையை நாகா்கோவில் மாவட்ட தொழிலாளா் நலவாரியத்தில் பி.பி.டி.சி. நிறுவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து மீதத் தொகையை பி.பி.டி.சி. நிறுவனம் நாகா்கோவில் தொழிலாளா் நலவாரியத்திடம் வழங்கியது.

இந்தத் தொகையை பெறுவதற்கான ஒப்புதல் படிவத்தை நாகா்கோவில் தொழிலாளா் நலவாரிய அலுவலா் தலைமையில் நலவாரிய அலுவலா்கள் சனிக்கிழமை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களை நேரில் சந்தித்து வழங்கினா்.

இதில், தொழிலாளா்கள் குறித்த விவரங்கள்,எந்த மாவட்டம், தாலுகாவில் இலவச வீடு அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களடங்கிய விண்ணப்பங்களை வழங்கியுள்ளனா்.

விண்ணப்பத்தை எப்போது வழங்க வேண்டும் என்று தெரிவிக்காத நிலையில் தொழிலாளா்கள் இந்தப்படிவம் அரசு சாா்பாக வழங்கப்பட்டுள்ளதா அல்லது பி.பி.டி.சி. நிறுவனம் சாா்பாக வழங்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com