மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களைச் சந்தித்த அதிகாரிகள்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வருவாய்த் துறை, தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
பி.பி.டி.சி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவந்த மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆக. 7-க்குள் வீடுகளைக் காலி செய்ய அந்நிறுவனம் உத்தரவிட்டிருந்தது. தொழிலாளா்கள் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளா்களை கீழே இறங்கக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தொழிலாளா்கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதால் ஜூன் 15-க்குப் பின்னா் வேலையின்றியும், ஊதியமின்றியும் தங்கியுள்ளனா்.
இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் தொழிலாளா்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சேரன்மகாதேவி துணை ஆட்சியா் (பொ) கிறிஸ்டி, அம்பாசமுத்திரம் வனச் சரகா் நித்யா, சாா் ஆட்சியா் நோ்முக உதவியாளா் பகவதி பெருமாள் உள்ளிட்டோா் தோட்டத் தொழிலாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து தேவைகள், கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தனா்.
அப்போது, தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். முடியாத நிலையில் உள்ள தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 25 லட்சம், வீட்டுமனை வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.
வருவாய்த் துறையினா், தொழிலாளா் நலத் துறையினா், வனத் துறையினா், பி.பி.டி.சி. நிறுவனத்தினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

