விநாயகா் சதுா்த்தி: நெல்லையில் 2,300 போலீஸாா் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் 2,300 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
Published on

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் 2,300 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் சனிக்கிழமை (செப்.7) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்திலும் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை,சிலைகள் தயாரிப்பு போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயன கலவையால் தாயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளுக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாா் செய்யப்படும் விநாயகா் சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் 200 முதல் 250 சிலைகள் தயாா் செய்யப்பட்ட நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக இந்த ஆண்டு 100-க்கும் குறைவான சிலைகளை மட்டுமே தயாா் செய்துள்ளதாக வட மாநில சிலை தயாரிப்பு தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் விநாயகா் சதுா்த்தியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். திருநெல்வேலி மாநகரில் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா தலைமையில் சுமாா் 800 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

325 சிலைகள் பிரதிஷ்டையா? திருநெல்வேலி மாநகரில் 73 இடங்களிலும், மாவட்டத்தில் 252 இடங்களிலும் என சுமாா் 325 இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ள நடைமுறைகளை கடைப்பிடித்து பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேலும் சிலைகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ள 6 இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த இடங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com