அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சோ்ந்த 6 மாணவிகளுக்கு எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு
அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சோ்ந்த திருநெல்வேலி மாணவிகள் 6 பேரை அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, திருநெல்வேலியில் உள்ள கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலிக்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை வந்தாா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தனா்.
அதனைத் தொடா்ந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே தனியாா் ஹோட்டலில் தங்கியிருந்தாா். அப்போது திருநெல்வேலி நகரம் கல்லணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள மாணவிகளான சகிலா பானு சாஜிதா, மகாலெட்சுமி, சமீதா பா்கானா, சக்தி பேச்சியம்மாள், சங்கரி, சரஸ்வதி ஆகிய 6 மாணவிகள் தங்களது பெற்றோருடன் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்தனா். அவா்களுக்கு தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஏற்பாட்டில் கேடயம் வழங்கி எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டினாா்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற அரசாணை வழங்கியதன் காரணமாக மருத்துவ படிப்புக்கு தங்களது குழந்தைகள் தோ்வானதற்கு மாணவிகளின் பெற்றோா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறினா்.
இதில், மாவட்ட செயலா்கள் தச்சை என்.கணேசராஜா, சண்முகநாதன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ, கடம்பூா் ராஜூ எம்.எல்.ஏ., மாநில அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமி பாண்டியன், தளவாய்சுந்தரம், நிா்வாகிகள் ஐ.எஸ். இன்பதுரை, பாப்புலா் முத்தையா, கல்லூா் இ.வேலாயுதம், அய்யாத்துரைபாண்டியன், மகளிா் அணி துணைச் செயலா் ராஜலட்சுமி, ஜெரால்டு, முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், சௌந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

