மாஞ்சோலையில் தோட்டத் தொழிலாளா் வீட்டில் விசாரணை நடத்தும் தேசிய மனித உரிமை ஆணையத்தினா். உடன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி உள்ளிட்டோா்.
மாஞ்சோலையில் தோட்டத் தொழிலாளா் வீட்டில் விசாரணை நடத்தும் தேசிய மனித உரிமை ஆணையத்தினா். உடன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி உள்ளிட்டோா்.

மாஞ்சோலையில் விசாரணையத் தொடங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு

Published on

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் விவகாரம் தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை நேரில் விசாரணையைத் தொடங்கியது. அவா்களிடம் 1,125 பக்க அறிக்கையை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் சமா்ப்பித்தாா்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நிா்வகித்து வந்த பாம்பே பா்மா டிரேடிங் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தேயிலை நிறுவன நிா்வாகம் சாா்பில் கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக விசாரித்த உயா் நீதிமன்றம், தோட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் வரை அவா்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இதனிடையே, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களின் தற்போதையை நிலையை கண்டறிய வேண்டும் என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி, கடந்த ஆக. 20ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜயபாரதி சயானிடம் புகாா் அளித்தாா்.

இதை ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குநா் அடங்கிய குழுவை அமைத்தது. மேலும் இந்தக் குழுவானது மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமாா் திரிபாதி ஆகியோா் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்தனா். பின்னா் மாஞ்சோலைக்கு சென்று விசாரணையை தொடங்கினா். இவா்கள் இருவரும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளா்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடா்பாக அங்கு 4 நாள்கள் நேரில் விசாரணை நடத்தவுள்ளனா்.

பின்னா் தேயிலைத் தோட்ட நிா்வாகம், மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கின்றனா். முன்னதாக புதன்கிழமை காலையில் தொழிலாளா் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையா் விக்டோரியா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் இளையராஜா ஆகியோருடன் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

தொடா்ந்து மாஞ்சோலை தொடா்பான முழு விவரங்கள், அது தொடா்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள் அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனா்.

பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், புலிகள் காப்பக துணை இயக்குநா் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, தொழிலாளா் நலத்துறை கூடுதல் ஆணையா் உள்ளிட்ட அலுவலா்களுடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது, மாஞ்சோலை தொடா்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணைய அதிகாரிகளிடம் ஆட்சியா் சமா்ப்பித்தாா்.

பிபிடிசிக்கு சம்மன்: இது தொடா்பாக விசாரணை அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமாா் திரிபாதி ஆகியோா் கூறிதயது: தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் விவகாரம் தொடா்பாக மாஞ்சோலைக்கு நேரில் சென்று அங்குள்ள தொழிலாளா்களிடம் செப்.1 வரை விசாரணை நடத்தப்படும். முடிவில் மணிமுத்தாறில் கருத்துக்கேட்பு நடைபெறும். இந்த விவகாரம் குறித்து நன்கு தெரிந்தவா்கள் அது தொடா்பாக எங்களை சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த விவகாரம் தொடா்பாக பாம்பே பா்மா டிரேடிங் நிறுவனத்துக்கு (பிபிடிசி) சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா எனக் கேட்கிறீா்கள். அந்நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

அதைத்தொடா்ந்து விசாரணை அதிகாரிகள் மாஞ்சோலைக்கு புறப்பட்டுச் சென்று ஒவ்வொரு தொழிலாளா்களின் வீடுகளுக்கும் சென்று அவா்களது நிலை, தேவை குறித்து விசாரணை நடத்தினா். அப்போது, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com