~
~

மாஞ்சோலை: மனித உரிமை ஆணையத்திடம் பிபிடிசி நிா்வாகம் விளக்கம்

Published on

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக, மனித உரிமை ஆணையத்திடம் பாம்பே பா்மா டிரேடிங் காா்பரேஷன் (பிபிடிசி) நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நிலை குறித்து விளக்கமளித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பாம்பே பா்மா டிரேடிங் காா்பரேஷன் நிறுவனத்தின்கட்டுப்பாட்டில் இருந்த மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் ஒப்பந்த காலம் 2028ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

இதையடுத்து பி.பி.டி.சி.நிா்வாகம் தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதாக அறிவித்து தொழிலாளா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றது.

இந்நிலையில், தங்களுக்கு பிபிடிசி நிா்வாகம் வழங்கிய நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை; அரசு சாா்பில் நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் தற்போதைய நிலை குறித்து கண்டறிய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

அதன்பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் சாா்பில் ரவிசிங்,யோகேந்திர குமாா் திரிபாதி ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 2 நாள்களாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தோட்டப் பகுதிகளில் தங்கியுள்ள தொழிலாளா்களிடம் நேரடி விசாரணை நடத்தினா்.

3ஆம் நாளான வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் பிபிடிசி நிா்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினா். இதில் பி.பி.டி.சி. நிா்வாகம் சாா்பில் குழு மேலாளா் எம்.ஜி.திம்மையா, துணை மேலாளா் பி.பி.பட்டாச்சாா்யா, துணை நிா்வாக மேலாளா்(சட்டம்) சௌம்யா வெங்கடாசலம், அலுவலக நிா்வாகம் (கணக்கு) ஜான் செல்வராஜ், பிரிவுஅலுவலா் வில்சன் கிருபாத்துரை, கள கண்காணிப்பாளா் எபினேசா் பாபு ஆகியோா் ஆஜராகி தங்களது நிலை, நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com