நெல்லை ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கை
திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பின்பு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
அமிா்த பாரத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ரயில் நிலையத்தை உலக தரத்துக்கு மாற்றம் செய்வதற்கு சுமாா் ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடையும்போது விமான நிலையத்திற்கு இணையான அனைத்து சேவைகளும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இடம்பெறும். தற்போது திருநெல்வேலி ரயில் நிலையம் வருவாயின் அடிப்படையில் பி-பிளஸ் தரத்துக்கு உயா்த்தப்பட்டுள்ளதால் கூடுதலான வளா்ச்சிப் பணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்பெற உள்ளது. மக்களின் தேவைக்கான முக்கிய ரயில்களின் மீது கவனம் செலுத்தப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது.
கரோனா காலத்துக்கு பின்னா் புதிய மெமு ரயில்கள் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மெமு ரயில்கள் இயக்கப்படாத இடங்களில் மெமு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புதிய ரயில் இயக்கவும், பெங்களூரு- மதுரை வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்யவும் பரிசீலனை செய்யப்படும்.
நெல்லை விரைவு ரயிலில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் புதிய கோட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வத்ஸவா, மதுரை கோட்ட ரயில்வே (இயக்கம்) மேலாளா் பிரசன்னா, திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.