மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: நெல்லை எம்.பி. வலியுறுத்தல்
மேலப்பாளையம், பாளையங்கோட்டை, பேட்டை ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வலியுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி ரயில் நிலையம் மதுரை கோட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால், இங்குள்ள கட்டடமும், ரயில் நிலையத்தில் வசதிகளும் நல்ல நிலையில் இல்லை. எனவே, இந்த ரயில் நிலையத்தை நவீனமயமாக்குவதோடு, பெங்களூரு, காந்திநகா் ரயில் நிலையங்களைப் போன்று முழுவதும் குளிா்சாதன வசதி ஏற்படுத்த வேண்டும்.
ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். வாகன நிறுத்த வசதியோடு மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட வேண்டும். மேற்கு பகுதியில் பெரிய நுழைவாயில் அமைத்து அங்கிருந்து பயணிகள் நடைமேடை 7 மற்றும் 8 ஆகியவற்றுக்கு செல்லும் வகையிலும், நடைமேடைகளை நவீன வசதிகளுடன் கட்ட வேண்டும். 2 ஆவது நுழைவாயில் பகுதியில் சுமாா் 500 போ் அமா்ந்து சாப்பிடும் உணவகம், பல்நோக்கு அறை ஆகியவற்றை கட்ட வேண்டும். கூடுதலாக மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும்.
பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் செந்தூா் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அந்த ரயில் நின்றுசென்றால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பல்வேறு பணிகளுக்காக எளிதாக வந்து செல்ல முடியும். இதுதவிர சென்னை செல்லும் மக்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பதிலாக பாளையங்கோட்டையில் இருந்து ரயில் ஏற முடியும்.
பேட்டையை சுற்றிலும் 17 கிராமங்கள் உள்ள. ஏறக்குறைய 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறாா்கள். இவா்களில் பெரும்பாலானோா் மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணம் செய்கிறாா்கள். இவா்கள் அனைவரும் மேற்கண்ட ஊா்களுக்கு செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தே ரயில் ஏற வேண்டியுள்ளது.
எனவே, ஈரோடு-செங்கோட்டை, செங்கோட்டை- தாம்பரம் ரயில்கள் பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலப்பாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறாா்கள். இங்குள்ள பெரும்பாலானோா் சென்னை, திருப்பூா், கோவை போன்ற ஊா்களுக்கு பணிநிமித்தம் சென்று வருகிறாா்கள். ஆனால், மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்வதில்லை. இந்த ரயில் நிலையம் அண்மையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நாகா்கோவில்-கோவை, அனந்தபுரி விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில், அந்தியோதயா ரயில் ஆகியவை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

