

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நான்குனேரியைச் சோ்ந்த முனியாண்டி- அம்பிகா தம்பதியின் மகன் சின்னத்துரை (19). இவரது சகோதரி சந்திரா செல்வி (16). அண்ணனும், தங்கையும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் பயின்று வந்தனா். கடந்த 2023 ஆம் ஆண்டு நான்குனேரி வீட்டில் இருந்த சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை சக மாணவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் சிகிச்சைக்கு பின்பு சின்னத்துரை நலம் பெற்று வீடு திரும்பினாா்.
தமிழக அரசின் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்துரை குடும்பத்திற்கு வீடு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளிப்படிப்பை முடித்த சின்னத்துரை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் கல்லூரியில் 2-ஆம்ஆண்டு படித்து வருகிறாா்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் பழக்கமான நண்பருடன் கொக்கிரகுளம் அருகேயுள்ள வசந்தா நகா் பகுதியில் புதன்கிழமை மாலை பேசிக் கொண்டிருந்த சின்னத்துரையை தாக்கிய மர்ம நபர்கள், அவரது செல்போனைப் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சின்னத்துரை மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா் .
இதுகுறித்து காவல் துணை ஆணையா் வினோத் சாந்தாராம் மற்றும் போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், காவல்துறை தரப்பில் முதல்கட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது:
புதன்கிழமை மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சின்னத்துரை சென்றுள்ளார்.
சுமார் 07.30 மணியளவில் இனம் தெரியாத நபரின் அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னதுரையிடம் விசாரித்த பொழுது, இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் தனது அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடமிருந்த அலைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறுகிறார்.
சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிட்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.