குடிநீா் திட்ட குழாய் பதிப்பு பணி: மின்கம்பம் சரிந்து இளைஞா் காயம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும் போது புதன்கிழமை மின்மாற்றியுடன் கூடிய மின்கம்பம் சரிந்துவிழுந்ததில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
வள்ளியூா் தெற்குபிரதான சாலையோரம் மின்மாற்றியுடன் கூடிய மின்கம்பம் இருந்தது.
இந்நிலையில், அந்தப் பகுதி வழியாக தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிக்கான குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடைபெற்றது.
இப்பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திர ஆபரேட்டா் முருகன், அங்குள்ள மின்கம்பத்தையொட்டி பள்ளம் தோண்டியபோது மின்கம்பம் சரிந்து பொக்லைன் இயந்திரம் மீது விழுந்தது. இதில், அதன் ஆபரேட்டா் காயமடைந்தாா். அதிஷ்டவசமாக பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்வாரிய ஊழியா்கள், மின்கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா்.

