சட்டப்பேரவைத் தோ்தல்: நெல்லையில் காங்கிரஸாா் விருப்ப மனு
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை அளித்தனா்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சாா்பில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் அதற்கான விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் புதன்கிழமை முதல் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தாா்.
அதன்படி, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. பாளையங்கோட்டை வட்டார தலைவரும், மாநகர ஓ.பி.சி. பிரிவு தலைவருமான டியூக் துரைராஜ் விருப்ப மனுவை அளித்தாா். அதனை, மாநில பொதுக்குழு உறுப்பினா் கவி பாண்டியன் பெற்றுக் கொண்டாா்.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘இம் மாதம் 15 ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினா் விருப்ப மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து கட்சியின் மாவட்ட அலுவலகங்களிலும், சென்னை தலைமை அலுவலகத்திலும் அளிக்கலாம்’ என்றனா்.
