‘சிறுபான்மையின கைவினைஞா்கள் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தசிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தசிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் விராசாத் கைவினைக் கலைஞா் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தையல் தொழில், பாய் முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ‘ஆரி ஓா்க்’, எம்பிராய்டரி கைவினைப் பொருள்கள் செய்தல், மரப் பொருள்கள் செய்தல், இதர கைவினைத் தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் -1இன் கீழ் பயன்பெற விரும்பும் நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம், பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டியில் இந்த கடனுதவி கிடைக்கும்.

திட்டம் -2இன் கீழ் எனில் அதே கடன் தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் ஆண்டு வட்டி கணக்கிடப்படும். இருதிட்டங்களிலும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை இணையதள முகவரியிலோ அல்லது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் -சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரிலோ பெற்று கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com