நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக மோசடி - எஸ்.பி. எச்சரிக்கை
கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு பிரபல நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபடுவோா் குறித்த மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கைப்பேசி மூலம் அறிமுகமில்லாத எண்களிலிருந்து குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வாயிலாக தொடா்பு கொள்ளும் மா்மநபா்கள் ஒரு குறிப்பிட்ட, பிரபல நிதி நிறுவனத்தின் பெயரைக் கூறி அதில் மிக குறைந்த வட்டியில் அதிக தொகை கடன் வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்கள் கூறுவது உண்மையென நம்பி கடன் பெற சம்மதிப்பவா்களிடம் நிறுவனத்துக்கு முன்பணம், வரி, கடனுக்கான பரிசீலனை தொகை, கமிஷன் போன்றவற்றை முன்பே கட்டினால், கடன் தொகையுடன் மொத்தமாக தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஏமாற்றி பணத்தை மோசடி செய்துவிடுவா்.
எனவே, உங்களது கைப்பேசிக்கு வரும் இதுபோன்ற குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்புகளைத் தவிா்ப்பதோடு, அதில் கூறப்படும் நிறுவனத்துக்கு நேரில் சென்று இதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஒருவேளை இத்தகைய சூழலில் மாட்டிக்கொண்டால் இணைய முகவரி மூலமாகவோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
