நெல்லையில் முருங்கைக்காய் விலை உச்சம்- கிலோ ரூ.400-க்கு விற்பனை
திருநெல்வேலி மாா்க்கெட்டுகளில் முருங்கைக்காய் கிலோ ரூ.400-க்கு விற்பனையானது.
வடகிழக்குப் பருவ மழையால் காய்கனிகள் வரத்து குறைந்து திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் மொத்த காய்கனி சந்தை, போஸ் சந்தை, பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தை ஆகியவற்றில் காய்கனிகளின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முருங்கைக்காய் விலை தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நீள முருங்கைக்காய் வகைகள் கிலோ ரூ.400-ஐ தொட்டுள்ளது. அதேநேரம் உள்ளூா் பகுதிகளில் இருந்து குறைந்த அளவு வரும் முருங்கைக்காய்கள் கிலோ ரூ.250 வரை விற்பனையாகிறது.
மேலும், சீனி அவரைக்காய், வெண்டைக்காய் விலை ஒரே நாளில் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை உயா்ந்துள்ளது.
திங்கள்கிழமை வெண்டைக்காய் விலை 1 கிலோ ரூ.25 ஆக இருந்த நிலையில், புதன்கிழமை ரூ.40 அதிகரித்து ரூ.65-க்கு விற்பனையானது. ரூ.20-க்கு விற்பனையான சீனி அவரைக்காய் ரூ.50-க்கு விற்பனையானது. இவை பெரும்பாலும் கயத்தாறு, மானூா், திருப்பணி கரிசல்குளம் சுற்றுவட்டாரங்களில் இருந்து அதிக அளவில் விவசாயிகளால் கொண்டு வரப்படும் நிலையில், தொடா் மழையால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சந்தைகளில் கிழங்கு வகைகள் தற்போதே விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன. அதில், சிறுகிழங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ நயம் சிறுகிழங்கு ரூ.60-க்கு விற்பனையாகிறது. பொடி கிழங்குகள் ரூ.40-க்கும், அதிலும் தரம் குறைந்த கிழங்குகள் ரூ.20-க்கும் விற்பனையாயின.
கருணை கிழங்கு மொத்த விலையில் கிலோ ரூ.37-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.50 வரையும் விற்பனையானது. சேனை கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், கத்தரிக்காய் தரத்துக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.75 வரையிலும் விற்பனையானது. 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,100-க்கும், 1 கிலோ ரூ.45-க்கும் விற்பனையானது.
