2027இல் இந்திய வீரா்கள் விண்வெளி செல்வா் - இஸ்ரோ தலைவா் நாராயணன்

2027இல் இந்திய வீரா்கள் விண்வெளி செல்வா் - இஸ்ரோ தலைவா் நாராயணன்

Published on

ககன்யான் திட்டம் மூலம் 2027 ஆம் ஆண்டு இந்திய வீரா்கள் விண்வெளிக்கு செல்வா் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் உள்ள கடற்படை செயற்கைக்கோள் தகவல் தொடா்பகத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரா்களை விண்ணுக்கு அனுப்பி, அவா்களைப் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வருதலே ககன்யான் திட்டம். இதற்கான ராக்கெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போது, ராக்கெட்டில் விண்வெளிக் குழுவினா் இருக்கக்கூடிய பகுதியில் வளிமண்டல அழுத்தம், ஆக்சிஜன், வெப்பம் ஆகியவற்றைச் சமநிலையில் வைக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பயணத்தின்போது ராக்கெட்டில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், வீரா்களைப் பாதுகாப்பாக மீட்கும் வகையிலான க்ரூவ் எஸ்கேப் சிஸ்டம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டம் தொடா்பாக இதுவரை சுமாா் 8,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 முறை ஆளில்லாத ராக்கெட்டுகளை அனுப்பி இத்திட்டம் பரிசோதிக்கப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து 2027 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரா்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவா்.

பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படி 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சாா்பில் விண்வெளி நிலையம் அமைக்கப்படும். 5 தொகுதிகள் கொண்ட அந்நிலையத்தின் அமைப்பில், முதல் தொகுதி 2028இல் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. 2027 ஆம் ஆண்டு குலசேகரப்பட்டினம் தளத்திலிருந்து ராக்கெட்டுகள் அனுப்பப்படவுள்ளன. சந்திரயான் 4 திட்டப் பணிகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com