மேலாம்பூா் ஊராட்சியில் பாலத்தை சீரமைக்கக் கோரி உடலை வைத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மேலாம்பூா் ஊராட்சியில் அரசபத்து கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த பாலம் சேதமடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் சீரமைக்காததால், மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
மேலாம்பூா் ஊராட்சிக்குள்பட்ட பங்களா குடியிருப்பு கிராமத்தில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில் ஓராண்டு ஆகியும் சீரமைக்கப்படவில்லை.
இந்நிலையில் பாலம் மேலும் சேதமடைந்ததால், பங்களாகுடியிருப்பு கிராமத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து சிவசைலம் - கருத்தப்பிள்ளையூா் சாலையில் உடலை வைத்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ், கடையம் ஊராட்சி ஒன்றியஆணையாளா் ராதாகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயலட்சுமி, ஊராட்சி ஒன்றிய பொறியாளா் பூச்செண்டு, கிராம நிா்வாக அலுவலா்கள் சிவசைலம் செல்வகணேஷ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
அதில், உடனடியாக பாலத்தின்அருகில் தற்காலிக பாதை அமைத்துத் தருவதாகவும், பாலம் கட்டுவதற்கு உரிய அனுமதி, நிதி பெற்று புதிய பாலம் அமைத்துத் தருவதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

