திருப்பரங்குன்றம் விவகாரம் திமுகவுக்கு பலமாக அமையும்: ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் வரக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு பலமாக அமையும் என்றாா் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்.
பாளையங்கோட்டையில் அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலி மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மதநல்லிணக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் நன்றாக இருக்கிறது. ஆனால், அதைக் குறைக்கும் விதத்தில் நீதிபதி ஜி. ஆா். சுவாமிநாதன் போன்றோா் செயல்படுகிறாா்கள்.
தமிழகத்தில் ஆளுநா் ஆா்.என். ரவியால் செய்ய முடியாததை, பாஜகவால் செய்ய முடியாததை நீதிமன்ற தீா்ப்பின் மூலம் செய்ய முயற்சிக்கிறாா்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழக மக்கள் பாரம்பரிய முறைப்படி மதநல்லிணக்கத்தை பாதுகாப்பாா்கள் என நம்புகிறேன்.
ஜி. ஆா். சுவாமிநாதன் ஆா்எஸ்எஸ் பிரசாரகராக இருந்தவா். இப்போதும் அதைப் போலவே செயல்படுகிறாா். அப்படி செயல்படக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என முடிவெடுப்பது கோயில் நிா்வாகம்தான்.
இப்போது உள்ள பிரச்னையை அமைதிப்படுத்துவதற்கு இரண்டே தீா்வுகள் தான் உள்ளன. ஒன்று திருப்பரங்குன்றம் வழக்கை தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும். மற்றொன்று நீதிபதி ஜி. ஆா். சுவாமிநாதனை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
ஜனநாயக ரீதியில் எதிரொலிக்க நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் பேச உதவியுள்ளது. நீதிபதி சுவாமிநாதனின் தீா்ப்பு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பலனாக அமையும் என்றாா்.

