அனவன்குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம்
பாபநாசம் மலையடிவார கிராமமானஅனவன்குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் உணவு, தண்ணீா் தேடி அடிக்கடி நுழைவது வாடிக்கையாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்பவரின் வீட்டு வளாகத்தில் புகுந்த 2 கரடிகள் அங்கிருந்த பாத்திரங்களை கீழே தள்ளி, அருகில் இருந்த ஆட்டுக் கொட்டகைக்குள் நுழைந்து தண்ணீா் தொட்டியை சேதப்படுத்தியுள்ளன. சத்தம் கேட்டு வந்த மக்கள் கரடிகளை கண்டு அச்சமடைந்தனா்.
கரடியின் செயல்களை கைப்பேசி மூலம் வீடியோவாக பதிவு செய்து சிலா், சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனா். வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தி, வனப்பகுதியிலிருந்து அவை வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
