காணாமல் போன இளைஞா் கிணற்றில் சடலமாக மீட்பு
ரவணசமுத்திரத்தில் புதன்கிழமை மாயமான இளைஞா் அதேப் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் முத்துக்குமாா் (32). இவா் கைப்பேசி பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக முத்துக்குமாா் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று புதன்கிழமை வீட்டுக்கு வந்துள்ளாா். அதன் பின் முத்துகுமாா் திடீரென மாயமானாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ரவணசமுத்திரம் ரயில் நிலையம் அருகே உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மிதப்பதாக கடையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று கடையம் போலீஸாா் மற்றும் முத்துக்குமாரின் உறவினா்கள் பாா்த்தபோது, உயிரிழந்தது முத்துக்குமாா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் முத்துக்குமாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
