நெல்லையில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியா்கள்
திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் காலி பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்து, தமிழகத்தின் 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் அந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், மாவட்ட அதிகாரிகள் கட்டாயமாக காலி பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என வற்புறுத்துவதாகவும், காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு வழிமுறைகளை வகுக்காமல் பணிகளை தொடர சொல்வதாகவும் கூறி, திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா். மேலும், சாவிகளை ஒப்படைக்கப் போவதாக அறிவித்ததோடு, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இதையடுத்து மாவட்ட மேலாளா் தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்துவது திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மண்டல முதன்மை மேலாளா் தலைமையில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் பணியாளா்கள் முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.

