போக்ஸோ வழக்குகளில் இதுவரை 29 பேருக்கு தண்டனை: எஸ்.பி.

Published on

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில், நிகழாண்டில் போக்ஸோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 29 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, அது தொடா்பான நீதிமன்ற விசாரணைகள் அனைத்தையும் உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா்கள் நேரடியாக கண்காணித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் விதமாக அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 28 போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 29 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒரு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு 25 ஆண்டுகள் மற்றும் 4 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில் போக்ஸோ வழக்குகளில் தொடா்புடைய 26 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com