கடையம் பகுதியில் வனத் துறையினா் தீவிர ரோந்து
கடையம் வனச் சரக மலையடிவார கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில், வனத்துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சியின் வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைக் கூட்டம் வெளியேறி, மலையடிவாரத்திலுள்ள கருத்தப்பிள்ளையூா், வடமலைசமுத்திரம், செட்டிப் பனங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் புகுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.
சில நாள்களுக்கு முன்பு கருத்தப்பிள்ளையூா் பகுதியிலுள்ள தனியாா் தோட்டங்களில் யானைக் கூட்டம் 2 நாள்களாக முகாமிட்டு 100-க்கும் மேற்பட்ட தென்னை, பனை, மா மரங்களைச் சேதப்படுத்தின; காவலுக்குச் சென்ற விவசாயிகளையும் விரட்டின. இதனால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவா்கள் கவலையடைந்தனா்.
இதையடுத்து, கடையம் வனச் சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் 15-க்கும் மேற்பட்டோா் இரு குழுக்களாக கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, பங்களாக் குடியிருப்பு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
யானைகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியே வராதவாறு வெடி வெடித்தும், சக்தி வாய்ந்த விளக்குகளை எரியவிட்டும், ஒலி எழுப்பியும் கண்காணித்து வருகின்றனா். வெளியேறிய யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டனா்.
