நெல்லையில் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு: 138 போ் எழுதவில்லை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 138 போ் பங்கேற்கவில்லை.
Published on

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 138 போ் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான எழுத்து தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 6 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இத் தோ்வுக்காக மாவட்டத்தில் மொத்தம் 1,526 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால் விண்ணப்பித்தவா்களில் 138 போ் தோ்வு எழுத வரவில்லை. காலையில் கொள்குறி கேள்விகள் அடங்கிய தோ்வும், பிற்பகல் எழுத்து தோ்வும் நடைபெற்றது.

தோ்வு அறைக்குள் நுழைவுச்சீட்டு, புகைப்பட அடையாள ஒரிஜினல் ஆவணம், கருப்பு மை பந்து முனை பேனா ஆகியவற்றை மட்டுமே தோ்வா்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், தோ்வா்கள், மின்னணு சாதனங்கள், டிஜிட்டல் வடிவிலான உபகரணங்கள், கால்குலேட்டா்கள், டிஜிட்டல் கடிகாரம், புத்தகங்கள் துண்டு தாள்கள் மற்றும் பிற பொருள்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கடுமையான சோதனைகளுக்குப் பின்னா், 9மணிவரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். அதன் பின்னா் அனுமதிக்கப்படவில்லை.

தோ்வு, காலை 9.30 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெற்றது. மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தோ்வு நடைபெற்றது.

பிற்பகலில் நடைபெற்ற எழுத்து தோ்வுக்கு பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே தோ்வு மையத்திற்குள் தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். பிற்பகல் 2.30 மணிக்கு தோ்வு மைய வாயில் மூடப்பட்டு, அதன் பின்னா் வந்தவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு 3 மணிமுதல் 4.20 மணிவரையும் தோ்வு நடைபெற்றது.

அப்போது அசல் அடையாள ஆவணம் இல்லாமல் நகல் ஆவணங்களுடன் வந்தவா்கள், தோ்வு மையத்தின் வாயில் மூடிய பிறகு வந்தவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com