யானைக் கூட்டம் சேதப்படுத்திய நெற்பயிா்கள்.
யானைக் கூட்டம் சேதப்படுத்திய நெற்பயிா்கள்.

அனவன்குடியிருப்பில் நெல்லை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

Published on

பாபநாசம் அருகே அனவன்குடியிருப்புப் பகுதியில் யானைக் கூட்டம் சுமாா் 1.5 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிா்களைச் சேதப்படுத்தியுள்ளன.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் வனத்திலிருந்து வெளியேறும் வன விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், வீட்டு விலங்குகளைத் தாக்கியும் வருகின்றன.

சில நாள்களுக்கு முன் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா் பகுதியில் வனத்திலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் தொடா்ந்து 2 நாள்களாக தனியாா் தோட்டங்களில் நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை, பனை, மா உள்ளிட்ட மரங்களைச் சேதப்படுத்தின.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அனவன்குடியிருப்பு பகுதியில் 5 யானைகள், ஒரு குட்டி யானை அடங்கிய யானைக் கூட்டம் அப்பகுதியைச் சோ்ந்த கல்யாணராமன் வயலில் இறங்கி, அங்கு பயிரிட்டிருந்த சுமாா் 1.5 ஏக்கா் நெற்பயிரை சேதப்படுத்தியுள்ளன.

தகவலறிந்த பாபநாசம் வனச்சரகா் குணசீலன் தலைமையிலான வனத்துறையினா் வயலைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து, யானைகள் வராமல் இருக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com