உவரி அருகே பைக் - வேன் மோதல்: 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையைச் சோ்ந்த ராஜ் மகன் யோசுவா (21), மைக்கிள் மகன் சாலமோன் (20). நண்பா்களான இவா்கள் திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில் தொழிற்கல்வி பயின்று வந்தனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை உவரிக்கு பைக்கில் சென்றுவிட்டு இரவில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். உவரியிலிருந்து கூட்டப்பனை செல்லும் சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை அவா்கள் முந்த முயன்றபோது, எதிரே தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த பாதுஷா லெப்பை ஓட்டிவந்த வேன் மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா்.
சடலங்கள் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்துகுறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
