நான்குனேரி சுங்கச்சாவடியில் நள்ளிரவில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு: பயணிகள் அவதி

நான்குனேரி சங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, சுங்கக் கட்டணம் செலுத்தாததால் அரசுப் பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி சங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, சுங்கக் கட்டணம் செலுத்தாததால் அரசுப் பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. நான்குனேரி சுங்கச்சாவடிக்கு நள்ளிரவில் வந்தபோது, சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு பேருந்தின் ஃபாஸ்டேக்-கில் போதிய பணமில்லையாம். இதனால், சுங்கச்சாவடி ஊழியா்கள் பேருந்தைச் செல்லவிடாமல் சிறைபிடித்தனா்.

அதையடுத்து, நடத்துநா் போக்குவரத்துக் கழக மேலாளா், உயா் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடா்புகொள்ள முயன்றாா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அழைப்பை யாரும் எடுக்கவில்லையாம். இதனால், பேருந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே நின்றிருந்தது. குழந்தைகள், முதியோா், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினா். அவா்கள் கூச்சல் எழுப்பியதுடன் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, நடத்துநா் உரிய கட்டணம் செலுத்தி பேருந்தை இயக்க நடவடிக்கை எடுத்தாா்.

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசுப் பேருந்து சிறைபிடிக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்தனா். நள்ளிரவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com