ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த தாய், மகன்!
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த தாய், மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கைலாசபுரத்தைச் சோ்ந்தவா் லீலா சாலமோன். இவருக்கு சொந்தமாக சுமாா் 20 சென்ட் நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகவலை மும்பையில் உள்ள தனது மகன் ரவிச்சந்திரனுக்கு, லீலா சாலமோன் தெரிவித்தாா்.
இதையடுத்து ரவிச்சந்திரன் சொந்த ஊருக்கு வந்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு ரவிச்சந்திரன், தனது தாயாா் லீலா சாலமோனுடன் கையில் பெட்ரோல் கேனையும் எடுத்து வந்தாா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
