மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி உயிரிழந்தது தொடா்பாக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா் விசாரணை
Published on

திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி உயிரிழந்தது தொடா்பாக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், ராஜாபுதுக்குடியைச் சோ்ந்தவா் மாடசாமி. இவருடைய மகள் அபிதா (6). இவா், திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா உயிரிழந்தாா்.

இது தொடா்பாக அவருடைய பெற்றோா் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களுடைய மகள் அபிதா, கடந்த வியாழக்கிழமை கழிவறையில் வழுக்கி விழுந்ததாக தெரிவித்தனா். பின்னா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நாங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, எங்களுடைய மகள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

எங்கள் மகளின் முகத்தில் காயம் உள்ளது. அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே, எங்களுடைய மகள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com