கடமான் வேட்டையில் ஈடுபட்டதாக இருவரிடம் வனத்துறை விசாரணை
களக்காட்டில் கடமான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள நெடுவிளையைச் சோ்ந்த நயினாா் மகன் இசக்கிராஜ்(37). தேவநல்லூா் மேலூரைச் சோ்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (29). இவா்கள் 2 பேரும் சில தினங்களுக்கு முன் இரவில் களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையையொட்டியுள்ள நெடுவிளை மலைக்குன்று பகுதியில் ஒரு மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டை வைத்து வீசினாா்களாம்.
அதை அப்பகுதியில் சுற்றித்திரிந்த கடமான், சாப்பிட்ட போது அது வெடித்து கடமான் முகம் சிதைந்து பலத்த காயமடைந்ததாம். ட தகவல் அறிந்து அங்கு வந்த களக்காடு வனச்சரகா் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினா் காயமடைந்த கடமானை சிகிச்சைக்காக களக்காடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் கடமான் உயிரிழந்துவிட்டது. கால்நடை மருத்துவா் ஜோதி விஸ்வநாத் கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்தாா்.
இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிந்து, இசக்கிராஜ், மணிகண்டன் ஆகியோரை வெள்ளிக்கிழமை பிடித்து களக்காடு தலையணையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.
விசாரணையின் போது மணிகண்டன், தான் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி விழுங்கி விட்டதாகவும், தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து, வனத் துறையினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதைத் தொடா்ந்து மருத்துவமனையில் உள்ள மணிகண்டன் மற்றும் இசக்கிராஜிடம் வனத்துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
